ஐப்பசி மாதம் (Nov)
ஏழாவது பதினெண்சித்தர் பீடாதிபதியும், இன்றைக்குக் கடலுள் மூழ்கியிருக்கும் இளமுறியாக் கண்டத்தின் ஒரு நகரான கபாடபுரத்தில் வாழ்ந்த கபாடபுரத்துக் கருவூறார் அவர்கள் வழங்கிய தரு வாசகம். ஓலைச் சுவடிகளில் இருந்த இவற்றை குருதேவர் அவர்கள் மனப்பாடம் செய்து வைத்திருந்தார். ஆனால் இதை தாளில் எழுதும் போது 108 தருவாசகங்களுள் 85 மட்டும் நினைவிற்கு வந்ததை இதில் வழங்குகின்றார். சித்தர் நெறிக் கருத்துக்கள் நிலவறைப் புதையலாக இருந்திடக் கூடாது என்றே அருட்கொடை வள்ளலாக குருதேவர் இதை ஏட்டில் எழுதி வழங்குகின்றார்.
மற்றொரு கட்டுரையாக அரசயோகிக் குருதேவர் தாம் தயாரித்திட்ட பிறமயோகிக்கு எழுதிய அஞ்சல் வடிவக் கட்டுரை இந்த இதழில் வழங்கப் படுகின்றது. தமிழின மறுமலர்ச்சிக்காக 20ஆம் நூற்றாண்டில் தோன்றிய இரு பெரும் தலைவர்களாகிய பெரியார் ஈ.வெ.ரா. அவரகளும், பேரறிஞர் அண்ணா அவர்களும் செயல்பட்டது எப்படி வீணாகியது என்பதை இந்த அஞ்சலில் குருதேவர் விளக்குகின்றார். அத்துடன் நாம் இந்தச் சூழ்நிலையில் மதவழிப் புரட்சியாளராக எப்படிச் செயல்பட வேண்டும் என்பதையும் விளக்கி அருளுகின்றார்.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.