தமிழின மொழி மத விடுதலை இயக்க உறுப்பினர்களுக்கு மட்டும் வெளியிடப்பட்ட கட்டுரையே இந்த 'தன்னிலைச் சிந்தனை ஆய்வுப் பரிந்துரைத் திருவோலை'. இருப்பினும் குருதேவர் அவர்கள் இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துக்களை நாடெங்கும் உள்ள தமிழ்ப் பற்றாளர்கள் அனைவருக்கும் எடுத்து இயம்புமாறு கூறியுள்ளார். தமிழ்ப் பற்றாளர்களுக்கு கூறும் முன்பாக, இந்தக் கட்டுரையின் கருத்துக்களை நன்கு படித்து புரிந்து உணர்ந்து கொண்டு செயலாற்றுமாறும் குருதேவர் அறிவுரை வழங்குகின்றார்.
தமிழர் சமுதாயத்துக்கென உண்மையோடு உழைக்கும் தலைவர்கள் எல்லாம் மாண்டு மடிந்து விட்டார்கள் என்கின்ற நிலையில், இந்து மறுமலர்ச்சி இயக்கத்தவர்களும், அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் செயல்வீரர்களும் என்னென்ன மாற்று வழிகளில் செயல்பட்டால் தமிழரின் மதமாகிய சித்தர்நெறி எனும் சீவநெறியாகிய மெய்யான இந்துமதத்தினை விடுதலை பெறச் செய்ய முடியும் என்பதைப் பற்றிச் சிந்திக்க வைப்பதற்காக எழுதப்பட்ட நெடிய கட்டுரையே இது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.